கள ஆய்வுகள்
சங்கையா - நீலமேக கலியுக மெய் ஐயனார்
பொதும்பு – மதுரை .
மதுரையில்
இருந்து 8 கி மீ துரத்தில்
அமைந்துள்ளது
கோவில்
பாப்பாகுடி
என்னும்
கிராமம். திரைப்படங்களில்
பார்ப்பது
போல எழில் மிகுந்த
கிராமம் தான்
இக்கிராமம்.
பாப்பா எனும்
சொல் புதிய
எனும் பொருள்
தரக்கூடிய
வேரிலிருந்து
பிறந்தது
எனும் வேர்ச்சொல்
ஆய்வாளர்கள்
கூற்று இங்கு
குறிப்பிடத்தக்கது.
பெயரிற்கு
ஏற்றார் போல
புதிய சோணை
மற்றும் கருப்பு
கோவிலுடன் அந்தக்
கிராமம்
அமைந்துள்ளது.
ஊரின்
பெயரானது
புதிதாக
கோவிலுடன்
ஏற்படுத்தப்பட்ட
கிராமம்
என்றே பொருள்
கூறுகிறது.
எனில் அதற்கு
முன்னர்
இவர்கள்
எங்கு
இருந்தார்கள்?...
இந்தக்
கேள்விக்கு
விடையாய்
அமைவது
பொதும்பு எனும்
கிராமம்.
பொதும்பு – சோலை,குறுங்காடு – என்று பொருள்.
காந்தளம் பொதும்பில் (அகநானுறு-18)
முல்லையும் பொதும்பில் (சீவகசிந்தாமணி-3042)
மேருவின் பொதும்பில் (கம்பராமாயணம் – மீட்டிப் 325)
கோவில் பாப்பாக்குடி பிரிவுக்கு முன்னர் வலப்புறமாக உள்ள சாலையில் சென்றால் 1-கட்டைத் தூரத்தில் இயற்கைப் போர்வை போர்த்திய ஒரு அழகிய கிராமத்தைப் பார்க்கலாம்.பொதும்பு என்றாலே அழகிய சோலை என்று பொருள். 80 – களின் திரைப்படங்கள் பெரும்பாலும் எடுக்கப்பட்ட ஊர் இது. இங்கு மிக முக்கியமான தெய்வங்களாக ஊராரால் மதிக்கப்படுபவை
1) சங்கைய்யா.
2) நீலமேக
கலியுக மெய்
அய்யனார்.
இன்றைய ஆய்வு இந்த 2 கோவில்களும் தான்.
முதலில் சங்கையா கோவிலே நம்மை வரவேற்கிறது. பல்வேறு பரிவாரண தெய்வங்களுடன் காவல் தெய்வமாக மக்களால் வணங்கப்பட்டு வருகிறார் சங்கையா. பெரிய மற்றும் சிறிய கருப்புகள் அவருக்கு இணையாக அருகருகில் வைக்கப்பட்டுள்ளனர்.
யார்
இவர்கள்...?
எதற்காக
நாட்டாரால்
வணங்கப்பட்டு
வருகிறார்கள்
இதற்கு
விளக்கம்
தருவது
வள்ளுவரின்
குறள்.
முறைசெய்து காப்பாற்றும் மாநிலமன்னன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
சரியான வழிநின்று மக்களை உயிராய் காக்கும் அரசன்; மன்னன்,தலைவன்,என்றும் மக்களால் இறைவனாக வணங்கப்படுவான்.
ஆம்....இத்தகு மன்னர்கள் தான் பெரும்பாலும் மக்களால் வணங்கப்படும் சில நாட்டார் தெய்வங்கள். இதற்குச் சான்றாய் அமைவதே கிடைக்கப்பெற்ற பல்வேறு நடுகற்கள். எனில் சங்கை முன்னொட்டாக வைத்து இருக்கும் இவர் யார்...? இந்த சங்கையாவின் கோலம் என்ன? இவற்றிற்கு விடை....புறப்பாடல்கள்..
இந்த சங்கையா எனும் சொல் சங்கு எனும் கடல் பரப்புப் பொருளோடு சேர்ந்தது. முத்து,சங்கு-எனும் பொருட்கள் (கடற்பொருட்கள்) பெரும்பாலும் சார்ந்திருப்பது பாண்டிய மன்னர்களையே. இதற்குச் சான்றாய் அமைவது கல்வெட்டியல் பேராசிரியர்.மா.பவானி எழுதிய பிற்கால பாண்டிய காசுகள் எனும் கட்டுரை. இதில் பாண்டிய காசுகளில் உள்ளச் சின்னங்களை வகைபடுத்துகையில் சங்கு அங்கு இடம் பெருவது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளர்.கி.ஸ்ரீதரன்(தொல்லியல் துறையு ஓய்வு) தன்னுடைய சங்கு பற்றியக் கட்டுரையில் (தினமணி) பாண்டியர்களின் துறைமுகங்கள் சங்கு வளையல் செய்யும் கூடங்களாக இருந்தன – என்றே குறிபிடுகிறார். மேலும் இதற்கு உண்மை சேர்க்கும் சான்றாக அமைவது தலையாணங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியப் பாண்டியனுக்கு உலகியல் உணர்த்த, மதுரையின் அழகைச் சொல்ல எழுதப்பட்ட மதுரைக்காஞ்சி
கோடு போழ் கடை நரும் (511) மதுரைக்காஞ்சி
என்று சங்கைப் பிளந்து வளையல் செய்வோரை தங்கள் துறைமுகத்தில் வைத்திருப்பதாகப் பதிவு செய்கிறது மேலும்
பொலற்கொடி தின்ற மயிர்வார் முன்னக
வலம்புரி வளையோடு கடிகை நூல் யாத்து
(நெடுநல்-147)
-என்று நெடுநல் வாடையில் தலையாணங் காணத்து செருவென்ற நெடுஞ்செழியனின் மனைவியான பாண்டிமாதேவி தன்னுடைய இருகைகளிலும் வலம்புரிச் சங்கை அறுத்துச் செய்த வளையல்கள் இட்டிருந்தார் என்று உறுதி செய்கிறது.
மேலும் வைகை ஆறு கடலோடு கலக்கும் மருகூர் பட்டினத்தில் இருந்து ஏற்றுமதியான பொருட்களில், சங்கு முக்கிய இடத்தை வகித்தது என்று மதுரைக்காஞ்சி (321-32) பதியச் செய்கிறது.
இவ்வாறு
சங்கை வைத்து
வரும்
செய்திகள்
எல்லாம்
பாண்டியர்களையே
சார்ந்திருப்பது
இல்லகியச்
சான்றுகளால் உறுதிபடுத்தப்படுகிறது.
ஆகழாய்வு
(கொற்கை/கொடுமணல்/அழகன்குளம்)
சான்றுகளும் அதற்கு
வலு
சேர்க்கிறது.
எனில் இங்கு
சங்கையாவாக
வணங்கப்பட்டு
வருபவர் ஒரு
பாண்டிய
மன்னனாகத்
தான் இருக்க
வேண்டும். இதை
உறுதி
செய்யவது கள
ஆய்வில் தென்பட்ட
முக்கிய
கோவில்
ஓவியம்.
கோவிலின்
உட்பிரகாரத்தில்
சங்கையாவின்
அருகில் கருப்புகருக்கு
முன்வாசலில் (நுழைவுத்
தூண் –
மேற்புறம்)
இரு கயல்கள்
(மீன்கள்) சின்னமாகப்
பொறிக்கப்பட்டுள்ளது.
இம்மீன்
சின்னம்
பாண்டியர்கருக்கே
உரியது
என்பது
அனைவரும் அறிந்ததே.
பின் எந்த
பாண்டிய
மன்னன் இவர்?
இக் கேள்விக்கு
விடை,ஒல்லையூர்
தந்த
பூதப்பாண்டியன்
என்பதே. சங்க
காலத்தில்
இருந்த (கி.மு 6-5) பாண்டிய
மன்னர்களில்
வெஞ்சினம்
கூறும் முறையில்
புறநானுற்றில்
பதியபட்டவர்கள்
இருவர் ஒன்று
ஒல்லையூர் தந்த
பூதப்பாண்டியன்
மற்றொன்று
தலையாணங் கானத்து
செருவென்று
நெடுஞ்செழியப்
பாண்டியன்.
இருவருமே
ஆசிவகத்தைப் புரந்த
மன்னர்களில்
முக்கியமானவர்கள்.
இவர்கள்
இருவரும்
தந்தை மகன் என்றும்;இவர்களே
கருப்புகளாக (பெரிய-சிறிய)
வணங்கப்படுகின்றனர்
என்றும் கள
ஆய்வுகளின்
மூலம் பேராசிரியர்.
க.நெடுஞ்செழியன்
உறுதி
செய்திருப்பார்.
ஆசிவகப்
பேரறிஞர்கள்
மூவரும்
அய்யனாராக
மக்களால்
வணங்கப்படுவதையும்
தன்னுடைய
ஆய்வுக்கட்டுரையில்
தெளிவுபடுத்தியிருப்பார்.
மேலும் இந்த
மூவரில் 3-வது
அய்யனார்
இயக்கனுடன்
கருப்புகள்
இணைந்து
வணங்கப்படுவது
பாண்டியர்களுக்கும்
– இயக்கனுக்கும்
உண்டான
தொடர்பினாலே ஆகும்.
இந்த அய்யனார்
பாண்டியர்
படையில்
படைத்தளபதியாய்
இருந்தார்
என்பதை
ஆய்வாளர்,பேராசிரியர்,முனைவர்.
தசரதன்
நன்நூலில்
பதிய
செய்திருப்பார்.
இவரின் நூல்
தமிழ்
ஓலைச்சுவடிகள்
பாதுகாப்பு
மையத்தால்
வெளியிடப்பட்டது
என்பது குறிப்பிடப்படவேண்டிய
ஒன்று.
இதை உறுதிப்படுத்தும்
தொடர்பாய்
அமைவது
புறநானுற்றில்
அமையும்
பாடல் இது
ஒல்லையூர்காத்த
/ தந்த
பூதப்பாண்டியனால்
பாடப்பட்ட, வெஞ்சினம்
கூறும்
முறையில் அமைந்தப்
பாடல். அங்கு
வெஞ்சினத்தில்
உறுதி பூணும்
பூதப்பாண்டியனே
இங்கு
சங்கையாவாக
உள்ளார்.
அருகில் இருக்கும் சின்ன கருப்பு நெடுஞ்செழியனாக (மகன்?) இருக்க வேண்டும்,அவர்களின் சின்னமாகவே மீன் சின்னம் அங்கு வரையப்பட்டிருக்க வேண்டும். மேலும் இங்கு தந்திர வழக்கத்திற்கே உரிய 7-கன்னித் தெய்வங்கள் தனியே வணங்கப்பட்டு வருகின்றன. ஆசீவகத்தை உருவாக்கியதில் மற்கலிகோசாலரோடு இன்னும் அறுவர் கூடினர் அவர்கள்....
கணியரா கலந்தா அச்சுதன் அக்கிவேசாயன் அசிதன்
என்று ஆய்வாளர்.A.L.பாசாம் அவர்கள் பாலி – இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டுவார். ஆய்வாளர்.க.நெடுஞ்செழியன் தன் கட்டுரைகளில் பல்வேறு கள ஆய்வுகளுக்குச் சென்று அங்குள்ள அய்யனார் கோவில்களில் லாட சன்யாசிகளுக்கு சிலை உண்டு, அறுவரில் இவரும் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று கூறியிருப்பார்.
யது
குலத்தோரால்
ஆளப்பட்ட
துவாரகை,ஆனர்த்த
தேசம்,லாடதேசம்
மூன்றும்
குசராத்திற்குள்
அடங்கி
இருந்தது. லாட
தேசத்திலிருந்து
சாக்த்த (
சக்தி வழிபாட்டு
முறை) முறையை,தாந்த்ரீக
முறைகளை
ஆசிவகத்தில்
இணைத்ததில்
இவர் பங்கு
இருக்கலாம்.
எழு கன்னி
வழிபாடு உடைய
கோவில்களில்
பெரும்பாலும்
இந்த லாட . சன்யாசி
இருப்பதை
பார்க்க
முடிகிறது. முக்கியமாக
அழகர்
கோவிலில் லாட
சன்யாசி இறங்கி
ஆடுபவர்கள்,
தமிழில் குறி
சொல்லி
ஆடாமல் வட
மொழியில்
புலம்பிக்
கொண்டு ஆடுவது
இதற்கு
மேலும்
சான்றாக
அமைகிறது. இதிலிருந்து
லாடன் எனும்
சன்யாசி வட மரபில்
இருந்து
இங்கு வந்து,
இங்கிருக்கும்
சிந்தனை
நீரோட்டத்தில்
கலந்தவர்
என்பது தெளிவு.
நாட்டார்
வழக்கியில்
ஆய்வாளர் கார்திகேயப்
பாண்டியனும்
தன்னுடைய லாடன்
கட்டுரையில்
இவர்கள்
சக்தி
வழிபாட்டை வடக்கில்
இருந்து
இங்கு கொண்டு
வந்து ஆசீவகத்தில்
இணைத்தனர்
எனும் கூற்று
தாந்திர -
ஆசிவக
இணைப்பேயாம்.
மேலும்
இக்கோவிலில்
சிலையாக அமைக்கப்பட்டுள்ள
ஸ்ரீ அரசன்,
ஸ்ரீ மந்திரி
எனும் சிலைகளும்,
அங்கு இருக்கும்
சங்கையா
மற்றும்
கருப்புகளும்
அரச மரபைச்
சார்ந்தவர்களே
என்பதை
உறுதிப்படுத்துகிறது.
இக்கோவில்
பூசாரியிடம்
சில வரலாற்று
குறிப்புகளை
கேட்கும்
பொழுது
பெரும்
வியப்பு தான்
ஏற்பட்டது. சோணை
மற்றும் அய்யனார்
கோவில்களில்
வழங்கப்படும்
பெட்டி
ஆற்றில் வந்த
கதையும்,மலையாளச்
சாமி எனும்
கதையும்,இங்கும்
பரவி இருப்பதே
இவ்வியப்பிற்குக்
காரணம் . மளையாள
நாட்டிலிருந்து
பெட்டி ஒன்று
ஆற்றில்
வந்ததாகவும் ,அப்பெட்டி
கோவில்
குளக்கரையில்
கரை ஒதுங்கியதாகவும்,
ஊர்த்தலைவர்
அதை
எடுத்துப்பார்த்த
பொழுது பெட்டிக்குள்
ஒரு சாமி
சிலையும்
(வெண்கல)
சிலசுவடிகளும்
இருந்ததாகவும்
பின்னர்
அச்சிலைக்காக
கோவில்
எழுப்பி
மக்கள்
கும்பிட்டு
வருவதாகவும்
பூசாரி
கூறினார். இது
500-ஆண்டுகளுக்கு
முன்னர்
நடந்த
நிகழ்வு என்றும்
பூசாரி
கூறுகிறார்.
அந்தச்
சுவடிகளைப்பற்றி
விசாரித்தப்பொழுது
அது என்ன ஆனது
என்று
தெரியவில்லை
என்று
கூறினர்.அப்படியானால்
அந்த மளையாள
நாட்டில்
இருந்து
வந்தப்
பெட்டியில்
இருந்த
சுவாமி யார்?.
ஆம்,அது
அய்யனாரே.
எந்த ஒரு
மனைவியும் இல்லாது
தனித்திருக்கும்
செண்டாயுதன்
அவர். அது அய்யனார்
தான் என்பதை
உறுதிப்படுத்தும்
விதமாய்
கோவிலின்
ஸ்ரீ மந்திரி
சிலைக்கு வலப்புறம்
ஐயப்பன்
சிலையும்
வைகப்பட்டுள்ளது.
முதல்
அய்யனாராகிய மாசாத்தன்/
பிடவூர்
சாத்தன்/
மற்கலி
கோசாலர்-
இங்கு
வந்திருக்கிறார்.இவரே
ஆசீவகத்தைத்
தோற்றுவித்த
மூல முதல்வர்.
ஊழ்க் கோட்பாட்டின்
தலைவராக
தமிழ்ச்சமூகத்தில்
கி.மு.6-ஆம்
நூற்றாண்டில்
இருந்தவர்
இவர். இது
ஆசிவக
வழக்கத்தில்
உள்ளக்
கோவில் தான் என்பதற்கு
மிக
முக்கியமானச்
சான்றாக அமைவது
மேல்
கோபுரத்தில்
வலப்புறத்தில்
அமைந்திருந்த
“களிளேறு”-
ஓவியமே.
ஒரு
வெள்ளை
யானையும்,
வெள்ளைக்
காளையும்
தங்கள் தலையை
இணைத்துக்
கொள்ளும்படி
வரையப்பட்டிருக்கும்
ஓவியம் அது.
வெள்ளை யானை
ஆசிவகத்தின்
குறியிடு
அதனாலே
அய்யனார்
சன்னதிக்கு
முன் அது
வாகனமாக
நிறுத்தப்பட்டிருக்கும்
வெண்காளை-இடபம்
என்று
அழைக்கப்படும்
அது ஜெயின
மரபில் முதல்
தீர்த்தங்கரர்
என்று
அழைக்கப்படும்
ஆதி நாதரின்
வாகனம். முதல்
அய்யனார்
(மற்கலி)-ஆதி
நாதரின்
வழியில்
ஆசிவக்கத்தை
உருவாக்கிய
காரணத்தினால்
அந்த
இருவரின் சின்னத்திலும்
ஒரு இணைப்பு
உண்டாகியிருக்கும்
இந்த இணைப்பு
அறவழியான
இணைப்பு.
மகாவீரருடரான
சண்டைக்குப்
பிறகு மற்கலி-கோசாலர்,
ஆதிநாதர்
மற்றும் பார்சுவநாதர்
வழியில்
ஆசிவகத்தை
உண்டாக்கினார்
என்று பாலி
இலக்கியமான
பாகவதி சூத்திரம்
உறுதி-செய்கிறது.
இந்த வழியான
இணைப்பே
ஜெயின மரபில்
உள்ள
ஆதிநாதர்
சின்னத்திற்கும்
ஆசீவக அறிவர் சின்னத்திற்கும்
உள்ள
ஒற்றுமையை
நிருபிக்கிறது.
இந்த
ஆதிநாதரே
சைவசமய
உருவாக்கத்தில்
சிவனாக பார்க்கும்
மரபு
இருப்பதால்,
பல அய்யனார்
கோவில்களில்
அய்யனார்கள்
சிவனின்
அம்சமாகப்
பார்க்கப்படுகிறரர்கள்.
சிவனின் அம்சமாக அய்யனார் பார்க்கப்படுவதை கோவில் பூசாரிகள் கூற (சமணர் மலையடி அய்யனார் கோவில் பூசாரியின் கூற்று-கள ஆய்வு) தேவாரத்தில் அப்பர் ஒரு படி மேலே சென்று சிவன் சாத்தனை தன் மகனாகவே வைத்து இருக்கிறவர் என்று கூறுவது இந்த இணைப்பின் காரமாகவே தான்.
தேவாரம் – திருநாவுக்கரசர்
“ சாத்தனை மகனாக வைத்தார் “
இவ்வாறு
சிவனின்
மகனாகவே
சாத்தனைக்
கருதுவது
இந்த யானை-காளை
தலைஇணைக்கும்
ஓவியத்திற்கு
சிறந்த விளக்கம்
ஆகும். அது
சிவன் என்று
இன்று வணங்கப்பட்டுக்
கொண்டுள்ள
ஆதி நாதர் –ஆசிவகத்தின்
தலைவர்
மற்கலிக்கும்
உள்ள கோட்பாட்டு
இணைப்பே
ஆகும். இந்த
ஆதிநாதர்
இணைப்பைக்
கூறும்
மற்றொரு சான்று
திருச்சி –
திரு ஆணைக்காவல்,
மதுரை-மீனாட்சி
அம்மன்
கோவில், திருப்பரங்குன்றம்
முருகன்
கோவில்களில்
உள்ள தூண்
சிற்பங்கள்.
அதில் கல்பவிருட்சம்
மரத்தை யானை
ஒன்று தன்
தும்பிக்கையால்
அசைத்து
தன்புறம் இழுப்பது
போல
இருக்கும்
சிற்பம்தான் அது.
ஜெயின மரபில்
கல்பவிருட்சம்
ஒரு புனிதக் குறியீடு
ஆதிநாதர்
முதலில்
உலகில்
உருவாக்கிய
அனைத்தையும்
தரவல்ல மரம்
என்பது அதன்
பொருள். அதை
யானை தன்புறமாய்
இழுப்பதும்
இந்த
இணைப்பாகவே
நோக்க
இயல்கிறது.
இந்த மலையாள
நாட்டில்
இருந்து வந்தது
எனும் கதை
அங்கு நிலைத்து
இருக்கும்
அய்யப்பன்
வழிபாட்டை
எண்ண
வைக்கிறது.
ஏதோ
காரணத்தினால்
ஆசிவகத்தின்
பல
மூலச்சுவடிகள்
ஆற்றில்
விடப்பட்டு
இருக்கின்றன.
அது ஞானசம்பந்தரின்
புனல்வாதமாகவும்
இருக்கலாம்.
அவைகளை மீட்டெடுப்பதின்
மூலமே அதன்
மூலத்தை
உறுதிபடுத்த
முடியும். சரி
காவலுக்கு
கருப்பு
இருக்கிறது,பெட்டியில்
வந்த
ஐயனாரும்
இருக்கிறார்
எனில் அவருக்கான
கோவில்
எங்கே...?,ஆம்
அவருக்காகவும்
கோவில்
எழுப்பப்பட்டுள்ளது.
அவர் இங்கு
மூலத்
தெய்வமாக மக்கள்
வழிப்பாட்டில்
உள்ளார்.
நீலமேக கலியுக மெய் அய்யனார்:
நீலம் என்ற
சொல்லிற்கு-
நிறம்,மாம்பழம்,கருமை,இருள்
என்னும் பலப்
பொருள்கள்
உள்ளன. இந்த
ஐயனுடன்
இருக்கும்
நீல
மேகத்தின்
பொருள் என்ன
என்பதைப்
பார்ப்போமேயானால்
கருப்பு
என்கிறப் பொருள்கொள்ளல்
ஆகும்.
நீலநிற மேகம் என்பது பொருந்தாப்பொருளில் அமைந்துள்ளது தமிழ் அகராதிகரளும் நீலம் என்பதற்கு கறுப்பு எனும் பொருளை உறுதி செய்கின்றன.
நீர் எனும் சொல் கடலையே குறித்தது. நீரின் நீறம் கொண்டே நீண்ட சொல் நீல் ஆகும்.
நீரொலித் தனை நீலவுவேற் றானை(ம.கா 369)
நீரின் நிறம் பகலில் நீலமும்,இரவில் கறுப்பாகவும் இருப்பதின் காரணமாக நீல்-நீலம் எனும் சொல் இருநிறத்தையும் குறித்தது.
நீலன்-சனி(கருநிறம்)
நீலி-கருநிற காளி,அவுரி
நீல்/நீல-கருங்குவளை.
எனும் பி.எல்.சர்மியின் (சங்க நுல்களில் மணிகள்) குறிப்பு அதற்கு வலு சேர்க்கிறது.
எனவே
இங்கு
ஐயனார்க்கு
முன்னொட்டாக
வரும் நீல
மேகம் என்பது
கரு
மேகம்/கார்
மேகம்/மழை
மேகம்-என்றே
பொருள்படும்.
ஆசிவகத்தின்
ஐய்யனார்
மெய் வழங்கும்
ஞானி என்பதே
முன்னோர்
மரபு. இதை ஆதிசங்கரன்
ஐயாவும் வழி
மொழிவார்.
சிலப்பதிகாரத்திற்கு உரைகாணும் நச்சினார்க்கினியர்.
“கச்சி வளைக்கச்சி காமக் கோட்டம் தன்னில்
மெச்சி இனிதிருக்கும் மெய்சாத்தான் செண்டு”.
-என்று ஒரு தொகைநூல் குறிப்பை எடுத்துக் காட்டுகிறார். இதில் வரும் காமக் கோட்டம்-காஞ்சி காமாட்சி கோவில் என்றும், காமாட்சியின் சந்னிதியின் பின்புறம் செண்டாயுதத்துடன் கூடிய சாத்தன்/ஐயனார் இருந்தார் என்றும் மயிலை சீனி. வேங்கட சாமி குறிப்பிடுகிறார். இங்கு பார்க்கப்பட வேண்டியது சாத்தனை/ஐயனை மெய் சாத்தன் எனக் குறிப்பிடுவது. அவரை மெய்யானவர் என்றே அடிமதிக்குடி ஐயனார் பிள்ளைத்தமிழும் குறிப்பிடும். இந்த மெய்ச்சாத்தன் பெயரே இவருக்கு பொய் சொல்லா மெய் ஐய்யனராக இங்கு அமைந்திருப்பது வியப்பானது தான். திருச்சி,திருநெல்வேலி,மதுரை,சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இதேப் பெயரில் ஐயனார் அமைந்திருப்பது அவரின் வழிபாட்டு நீட்சியைக் குறிக்கும்.
ஆசிவகத்தில் தற்செயல் கோட்பாட்டை (அக்ரியவாக) கொண்டு இணைத்தவர் பூர்ண காயபர்/காஷ்யபர்/ பூரணர் எனும் அறிவர் ஆவார். தமிழ்சங்க இலக்கியங்கள் முழுவதும், முக்கியமாக அகத்திணை மரபுகளின் கூறுகள் அனைத்தும் தற்செயலின் பிழிவாக அமைந்துள்ளதை பேராசிரியர்.க.நெடுஞ்செழியன் தன் ஆய்வுக் கட்டுரையில் தெளிவாகக் கூறியிருப்பார் (காதற் பாடல் கூறும் நூல்).
தலைவன்
தலைவியைக்
காணுதலும்,காதல்
கொள்வதும், திணைப்புனம்
காக்கும்
நிகழ்வு
மையலாக மாறுவதும்
/ தோழியின்
தூது என
அனைத்தும்
தற்செயல்
கோட்பாட்டின்
பிழிவே.
இத்தற்செயல்
கோட்பாட்டை உண்டாக்கியவர்
காயபர் எனும்
பூரண புஷ்கலை
உடனிருக்கும்
அய்யனார்
ஆவார்.
கோவிலுக்கு
உட்சென்று பார்க்கும்
பொழுது
இந்தக்
காயபரே இரு
மனைவியருடன்
இருக்கும்
சிலை உள்ளது.
எனவே மக்கள் மெய் சாத்தனாக, பொய் சொல்லா மெய் ஐயனாராக,முதல் ஐயனார் மற்கலிகோசாலரையும், நீலமேக ஐயனாராக தற்செயல் கோட்பாட்டின் தலைவா காபயபர் இருவரையும் வணங்குகின்றனர். கருமேகம் காரணம் கருதி உண்டாவது இல்லை,தற்செயலாக கூடி,தற்செயலாக கறுத்து,தற்செயலாக மழையைப் பொழிய வல்லது. இவ்வாறு தற்செயல் கோட்பாட்டை உணர்த்தும் விதமாகவே இவருக்கு இப்பெயரை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள் இது வியப்பே.
கோவில் பூசாரி, சங்கையா கோவிலில் பெட்டி மூலம் தனித்த ஐய்யனார் ஒதுங்கியதாகவும் அதன் பிடி மண்ணை எடுத்து கோவிலில் பாப்பா குடியில் சோணை சாமி என்று கோவில் எழுப்பியதாகவும் கூறுகிறார். இது பாப்பாகுடி புதிதாய் உண்டாகிய கிரம்மம் எனும் கருத்தை உறுதி செய்கிறது. அங்கும், பொதும்பிலிருந்து பிடிமண் எடுத்து செய்யப்பட்ட சோணை கோவிலுடன், முனியாண்டி எனும் தவசிகர் கோவில் வழிபாட்டில் இருப்பது அதற்கான சிறந்தசான்று.
ராக்காயி :
காயபர்
(ஐயனார்)
சந்னிதியின்
இடப்புறம்,
அதாவது
கோவில் நுழைவில்
பரிவார
தெய்வங்களாக
முனியாண்டி,
சோணை, இருளன்,
சீலைக்காரி
எனும்
தெய்வங்கள்
உள்ளன. அதில்
முக்கியமாக
நாம் காண
வேண்டியது
கையில்
குழந்தையுடன்
முழுமையாய்
அமர்ந்திருக்கும்
ராக்காயி
அம்மன். மதுரை
அழகர் கோவில்
மலையின் மீது
இருக்கும்
மூலராக்காயி
அம்மன்
கையில்
குழந்தை
இல்லை ஆனால்
இங்குள்ள
ராக்காயி
அம்மன்
கையில் குழந்தையை
உயர்த்திப்
பிடித்திருப்பதும்,இந்த
ராக்காயி
அம்மன்
ஐயனார்
கோவிலில்
அமைந்திருப்பதும்
ஒரு பெரும்
புதிருக்கான
விடையாகத்
தெரிகிறது.
அழகர் கோவில்
ராக்காயி
அம்மன் தல
வரலாறு-
“சிவனின்
சிலம்பில்
பட்ட கங்கை தீர்த்தம்
தெரித்து
இங்கு
கங்கையாக
அதாவது
சிலம்பாறாக
ஓடுகிறது”
என்கிறது. ராக்காயியும்
இங்கு
மலையின்
உச்சியில் இருக்கிறாள்
இந்த இணைப்பு
சிலப்பதிகாரத்தை
நமக்கு
நினைவுபடுத்தவில்லையா
என்ன?
மதுரை எரித்து முடித்த பின் கண்ணகி தேனிக்கு அருகில் உள்ள மலையில் ஏறி மேல் உலகம் சென்றாள் என்றே சிலப்பதிகாரம் கூறுகிறது எனில் கண்ணகியோடு இந்த ஆசிவக இணைப்பு எப்படி தோன்றியது என்பதற்கு அவளே ஆசிவக சமயம் சார்ந்தவள் என்பதே விடை.
சிலப்பதிகாரத்தின் மூன்றாவது நீதி “ ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் “ – என்பதாகும். ஊழில் துவங்கி ஊழாலே நிறைவு பெறுவதே சிலப்பதிகாரம். கோவலன் இறப்பிற்குப் பிறகு கண்ணகியின் தந்தை தன்னுடைய செல்வங்களைத் தந்து ஆசீவக துறவறம் ஏற்பதே அவருடைய சமயம் என்ன என்பதைத் தெளிவு படுத்தும்.
கண்ணகி
தானத் கடவுளர்
கோலத்து
(நீர்ப்படைக்காதை-100)
இதையும் விட
மிக
முக்கியச்
சான்று ஒன்று
இந்த
ராக்காயியை
சிலப்பதிகரத்துடன்
இணைக்கிறது.
சிலப்பதிகாரத்தில்
வரும் மாலதி
மகவு எனும்
காதையே அது.
அதில் மாலதி
எனும் பெண்,
ஒரு பார்ப்பனரின்
குழந்தையை
வளர்த்து வந்தாள்.
பால்
கொடுத்துக்கொண்டிருக்கும்
பொழுது
அக்குழந்தை விக்கி
இறந்து
விடுகிறது. சொல்லொனாத்
துயரில்
ஆழ்ந்த அவள்
ஒவ்வொரு
தெய்வமாக
சென்று
முறையிடுகிறாள்.
அனைத்து
தெய்வங்களும்
அவளுக்கு
உதவி செய்ய
முடியாது
என்று
கூறியவுடன்
சுடுகாட்டில்
இருக்கும் இடாகினி
எனும் பேய்
அக்குழந்தையின்
உடலை
வாங்கித்
திண்றுவிடுகிறது.
பின்னர்
வீட்டாருக்கு
என்ன பதில்
கூறப்
போகிறோம்
என்று கூறி
அழும்
நிலையில்,
பாசண்டைச்
சாத்தன் தானே
ஒரு
குழந்தையாய்
மாறிவந்து
அவளுடைய குறையைத்தீர்ப்பான்.
இப்பாசண்ட
சாத்தன்
பின்நாளில்
கண்ணகியின்
தோழியாள் தேவந்தியை
மணந்த
சாத்தன்
ஆவார் இது
சிலப்பதிகாரத்திற்கும்,
சாத்தன்
எனும்
ஐயனாருக்கும்
உள்ளத் தொடர்பு.
பாசண்டம்
என்பது 96 –
தருக்க
முறைகளில்
வல்லவர்
எனும் பொருள்
தரும் சொல்.
இச் சிலப்பதிகாரக்
கதைக்கும்,
இங்குள்ள
ராக்காயிக்கும்
என்னத்
தொடர்பு
எனும்
கேள்விக்கு
இந்தக்
கோவிலில்
நடைபெறும்
திருவிழா
நிகழ்வு விடை
தருகிறது.
என்னுடன்
பணிபுரியும்,
இந்த
ஊரைச்சேர்ந்த,
இந்த
அம்மனின்
பெயரையே தன்
பெயராகக்
கொண்டவர்
தந்தத் தகவல்,
சிலப்பதிகாரத்துடன்
இந்தக்கோவிலுக்கு
தொடர்புண்டு
என்பதை
உறுதிப்படுத்துகிறது.
அதன்படி
கார்த்திகை
மாதம் இக்
கோவிலில்
திருவிழா
நடக்கிறது.
திருவிழாவின்
முக்கிய
அம்சமான பலி
நிகழ்வுதான்
நமக்குத்
தேவையான
சான்று.
நடுநிசிக்கு
சற்று
முன்னான
இரவுப்
பொழுதில் ஒரு சினை
(பெண்)- ஆடு
கொண்டு
வரப்படுகிறது.
அதன் தலையை
துண்டிக்காமல்,வயிற்றைக்
கிழித்து அதன்
சின்னக்
குட்டியானது
எடுக்கப்பட்டு
அருகில்
ஓலையால்
கட்டப்பட்டு
இருக்கும்
குடிசை போன்ற
அமைப்பிற்குள்
கொண்டு
செல்லப்
படுகிறது.
அதன்பின்னர்
அந்தக் குடிசைக்குள்
அந்த சினை
ஆட்டின் கரு மண்சட்டியில்
சமைக்கப்படுகிறது.
சமைக்கப்பட்ட
கருவுடன்,
இரத்தச் சோறு
இட்டு
அந்தப்பானை
அருகில் இருக்கும்
குளத்திற்குள்
எடுத்துச்
செல்லப்படுகிறது.
அந்த இருள்
சூழ்ந்தப்பரப்பில்
இரத்தச் சோறு
மேல்
எறியப்பட்டு,பானை
குளத்தில்
விடப்படுகிறது
( இடாகினி உண்கிறாள்
). கோவிலுக்கு
உள்ளே
பேச்சிக்கு
சிலை
இருப்பதால்
படையளில்
அவளுக்கும் முறை
உண்டோ என எண்ணத்
தோன்றுகிறது.
ராக்காயி
கையில்
இருக்கும் குழந்தை
ஆட்டு வயிற்றில்
இருந்து
எடுத்து கரு
இரண்டும்
ஒப்புமைகளாக
இருக்கின்றன.
இடாகினி
குழந்தையைத்
திண்ற வழக்கு இங்கு
பின்பற்றப்படுகிறது.
இது முடித்த
பிறகு சாத்தன்
கோவிலில்
பூசை, அதாவது
சாத்தன்
குழந்தையாக
வருதல்.
நாட்டார் வழக்கியலில் இம் முறையை “சூலோடு குத்துதல்“ என்பார். வெளி எடுக்கும் குட்டிக்கு “துவளைக் குட்டி“ – என்று பெயரும் இடுவர். தென் மாவட்டங்களில் உக்கிரதெய்வங்களுக்கு இடப்படும் ரத்தப் பலியை மேற்கோள் காட்டும் ஆய்வாளர்.தொ.பரமசிவன் (அறியப்படாத தமிழகம் -). இதே போன்ற நிகழ்வையே தன் கட்டுரையிலும் குறிப்பிடுகிறார்.
எருமை,பன்றி போன்ற பலி குலக்குறிகள் சார்ந்து,கொற்றவைக்கு கொடுக்கப்பட்டாலும் இது போன்ற ரத்தப்பலிகள், போலச் செய்தல் முறையில் குறிப்பால் தங்கள் தொன்மத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த நிகழ்வு சிலப்பதிகாரத்தின் மாலதி மகவுடன் கொண்டத் தொடர்பைக் கண் கூடே காட்டுகிறது. இம் முறையான பாதயை நண்பர் மாயாண்டி அவர்கள் தங்கள் ஊரான நமசிவாயபுரத்தில் உள்ள சுடலை மாடன் கோவில் திருவிழாவில்,கணியன் ஆட்டமுடன் நடை பெறுவதாக இச்சான்றிற்கு வலு சேர்த்தார். அவள் கண்ணகியே.
திருவிழா
:
கார்த்திகை மாதத்தில் இங்கு ஐயனுக்குத் திருவிழா நடத்தப்படுகிறது. பிடி மண்மூலம் பாப்பாகுடியில் உருவாக்கப்பட்ட (காயபர்) சோணை கோவிலிருந்து காயங்கருப்பட்டி கொண்டுவரப்படுகிறது.இது திருவிழாவுக்கான உத்தரவு, அங்கிருந்து உத்தரவு வந்தவுடன் பொதும்பில் இருக்கும் (மற்கலி) பெட்டியில் இருந்து சுவாமி விக்ரகம் எடுக்கப்பட்டு குதிரை அலங்காரத்தில் ஐயன் காட்சி தருகிறார். பாலி இலக்கியங்கள் மற்கலி மற்றும் காயபர் இருவர் பெயர்களையும் இணைத்தே கூறுகிறது (சாமண்ண பால சூக்தம் ) இவ்விருவரின் இணைப்பு ஆசீவகத்தில் ஊழ் மற்றும் தற்செயல் கோட்பாட்டின் இணைப்பின் சான்றே. இந்த இருவரின் இணைப்பு இந்தக் கோவிலிலும் எடுத்துக்காட்டப்படுகிறது. அழகரைப் போல இங்கு புரவியில் ஐயனார் காட்சி தருகிறார்.
சாத்தன் – எனும் சொல்லை சூடாமணி நிகண்டு வெள்ளை யானை வாகன் என்று குறிப்பிடுகிறது. அதற்கு ஏற்றார் போல சன்னதியில் யானை இல்லையே என்ற வருத்தம் இருந்தது ஆனால் திருவிழாக் கோலத்தில். ஐயனுக்கு யானைப்பீடம் கொடுக்கப்படுகிறது.
ஆசீவகர்கள் மூங்கில் தண்டுடன் நடந்தார்கள் (லத்திஹாத்தா) என்ற சிறு குறிப்பை பரூவா அவர்கள் தன் கட்டுரையில் குறிப்பிடுவார். அதன்படி தண்டயுதத்துடனும் இவர் இங்கு காட்சி தருகிறார். குதிரை– அவர் அரச மரபில் இருந்து வந்தவர் என்பதை குறிக்கவேயாம். புத்தன்,மகாவீரர் போல மற்கலி-எனும் ஐயனும் இதே வேளிர் மரபில் வந்தவர்,திருப்பட்டூரை ஆண்டவர் என்று பேராசிரியர்.க.நெடுஞ்செழியனின் குறிப்பு உற்று நோக்கத்தக்கது.
ஆசீவகத்துடன்
காபாலிக
சைவத்தின்
மெல்லிய
இணைப்பை
உணர்த்துவதாய்
குதிரையின்
வயிற்றின்
இடது புறம்
பாதி
உடையுடன் இருக்கும்
பெண்ணுடன்
தவசிகள்
நிற்கும் கோலத்தைக்
காணலாம் இது
தாந்தீரீக
உத்தியே ஆகும்.
காபாலிகர்கள்
தந்திர
உத்திகளை
கடைப்பிடிக்கும்
சுடலை
நோன்பிகள். இதே
ஐயன் நிக்கண்ட
மதத்தை
உருவாக்கிய
பார்சுவநாதரின்
வழியில்
வந்தவர்
எனும்
உண்மையால்,
அப்பாண்டைநாதர்
உலாவும் ஐயனை
புகழ்வதால்
ஐயனுக்கு இங்கு
பார்சுவநாதரின்
சின்னமான
நாகக்குடையும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆசீவகத்திற்கு
வைணவம்
கொடுத்த
அரவணைப்பின்
சார்பாக இக்
கோவிலுக்கு
அருகில் ஒரு
பெருமால்
கோவில்
கட்டப்பட்டுள்ளது
(புதிதாய்).
சங்கையா
குதிரையின்
வயிற்றிலும்
பார்க்கடல்
பெருமாலின்
சிலை
வைக்கப்பட்டு
இருப்பதற்கும்
அதுவே காரணம்.குளக்கரையில்
காவல்
தெய்வமாக
பத்ர
காளியும் வழிப்பாட்டில்
உள்ளார்.
தத்துவம் என்பது உலகை நாம் பார்க்கும் பார்வை என்பார் ஆலன் உட்ஸ்.அதைப் போல வரலாற்றின் பல தொன்மங்கள் மக்களின் வழக்கில் சிதறிக் கிடக்கிறது.மீட்டெடுப்போம்.
ஆய்வுக்கு உதவிய நுட்கள்
சான்றுகோள்கள் :
1) அகநானுறு – 18.
2) சிவக சிந்தாமணி – 3042.
3) கம்பராமாயணம் (மீட்சி – 325).
4) திருக்குறள் - 388
5) பிற்காலக் காசுகள் – மா.பவானி.
6) தினமணி- சிறப்பு மிகு சங்கு வினாக்கள் (சங்கு கட்டுரை) – ஸ்ரீ தரன்.
7) மதுரைக் காஞ்சி – 511.
8) நெடுநல்வாடை – 141.
9) மதுரைக்காஞ்சி – 321,332.
10) கொற்கை,கொடுமணல் அகழாய்வு.
11) ஆசீவகமும் ஐயனார் வரலாறும் – க.நெடுஞ்செழியன்
12) அய்யனார் கதைப்பாடல் – முளைவர் தசரதர்.
13) புறநானூறு - 71
14) The doctrins of ajivikes – A.L.Basham.
15) சமணர் மலை அய்யனார் கோவில் கள ஆய்வு.
16) அப்பர் தேவாரம் – திருப்பயுற்றூர் – பாடல் 4
17) மதுரைக்காஞ்சி -369.
18) சங்க நூல்களில் மணிகள் – B.L.சாமி.
19) சிலப்பதிகாரம் – நச்சினார்க் கினியர் உரை.
20) அடிமதிக் குடி ஐயனார் பிள்ளைத்தமிழ்.
21) தமிழ் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும் – க.நெடுஞ்செழியன்
22)சமணர் என்போர் ஜெயினரா – க.நெடுஞ்செழியன்
23) சாமிகளின் பிறப்பும் இறப்பும் – ச.தமிழ்ச்செல்வன்
24) சிலப்பதிகாரம் – இறுதிப்படலம்
25) சிலப்பதிகாரம் - நீர்ப்படைக் காதை – 100.
26) சிலப்பதிகாரம் – மாலதி மகவு
27) அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவன்
28) களஆய்வு-நமசிவாயபுரம்-ஊர்த் திருவிழா(மாயாண்டி).
29) தமிழகத்தில் ஆசீவகர்கள் – ரா.விஜயலெட்சுமி.
30) ஆசீவக மதத்தின் அழியாச் சின்னங்கள் – ஆதிசங்கர்.
31) சாமண்ண பால சூக்தம் ( horn.trans).
32) அப்பாண்டை நாதர் உலா.
33) சூடாமணி நிகண்டு (சாத்தன்).
34) தத்துவத்தின் வரலாறு – ஆலன் உட்ஸ்.
ஆய்வுக்கு உதவியோர் :
திரு . விவேக் ( உடற்கல்வி ஆசிரியர் )
திரு .வெங்கடேஷ் (தொழில்நுட்ப உதவி ) – நன்றி