கள ஆய்வுகள்
கள ஆய்வு 3
செந்தில் ஆண்டவர் கோவில்
பரவை
28.01.2022
மதுரை பாத்திமா கல்லூரி – பரவை செல்லும் சாலையில் , பழைய குளிர்பானத் தொழிற்சாலைக்கு எதிரில் கரிசல்குளம் செல்லும் வழி உள்ளது.அது ரயில் போக்குவரத்துப் பாதையும் கூட.அந்தப்பாதை வழியே உள்சென்றால் ஒரு 50 மீட்டர் தொலைவில் அழகிய குளக்கரையில் செந்தில் ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது.பெயருக்கு ஏற்றார் போல் அது அழகிய குளக்கரை கோவிலே.அதன் உள்ளே அனைத்து முருகன் கோவில்களைப் போலவே அழகிய வேல் சாத்தப்பட்டு முருகன் காட்சியளித்தார்.ஆனால் அவர் சன்னதிக்கு அருகே இருந்த கருப்பு தான் ஒரு புதிய கேள்வியை மனதில் கிள்ளியது.எந்தத் தொடர்புமில்லாமல் கருப்ப சாமி ஏன் ஒரு முருகன் கோவிலுக்குள் இருக்க வேண்டும்?
கடந்த ஆய்வின்போழுது திருப்பரங்குன்றத்தின் வாசலில் இருந்த கருப்புசிலை இங்கு ஒப்புநோக்கத்தக்கது.முருகனுக்குத்தான் சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது,எனில் எதற்காக கருப்பிற்கும் அது செய்யபடுகிறது என்பது கேள்விக்குறியே !
அந்தக் கருப்பைத் தொடர்ந்து குளக்கரை வழியேப் பார்த்தால் பெரிய வெள்ளைப் புரவியுடன் (வெள்ளைக் குதிரை) எழிலாய் அய்யனார் இருக்கும் மண்டபம் காட்சியளிக்கிறது.
அம்மண்டபத்தில் செண்டாயுதத்துடன் அமர்ந்திருக்கும் பூரண அய்யனார் சிலை உள்ளது.அவர் பூரணம்,புட்கலை (பொற்கலை) என்னும் இரு மனைவியருடன் உடனுறை நிலையில் காட்சியளிக்கிறார்.கோவில் பூசாரி அவர்களை பூர்ணகலா மற்றும் புஷ்பகலா உடனுறை ஸ்ரீ அய்யனார் என்று நமக்கு அறிமுகம் செய்கிறார்.
எனினும் மக்கள் வழக்கில் அவர்கள் பூரணம் மற்றும் புட்கலை அல்லது பொற்கலை என்றே வழங்கப்பட்டு வருகிறார்கள்.
தமிழில் உள்ள திரு என்னும் (உயரிய,அழகிய,அறிவான,ஆற்றல்மிக்க என்னும் பொருள்தரும்) சொல்லே சங்கத மொழியில் ஸ்ரீ ஆக மருவியிருப்பதை நாம் அறிவோம்.வேர்ச்சொல் ஆய்வாளர்களும் அதையே உறுதிப்படுத்துகின்றனர்.இங்கு திரு அய்யனாராக வீற்றிருப்பது வேறு யாருமில்லை,அது பூரணக் காயபரே.
திருநெல்வேலி மாறுகால்தலை என்னுமிடத்தில்,மலையின் மீது இருக்கும் கல்வெட்டு இவரைப்பற்றிய ஒரு செய்தியை நமக்குக் கொடுக்கும்.அம்மலையின் மேல் இவருக்கு அய்யனார் கோவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது (சீவலப்பேரி அய்யனார் கோவில்).மலையின் மீதிருந்த இத்தமிழிக் கல்வெட்டை ஆய்வு செய்த ஆய்வாளர் மயிலை சீனி வேங்கட சாமி அவர்கள் ,
இதை சமணத் துறவிக்கானது என்றே அவர் நூலில் குறிப்பிடுவார்.அக்கல்வெட்டானது பின்வருமாறு.
“ வெண்காசிபன் கொடுத்திட்ட கல்காஞ்சனம்”
காஞ்சனம் என்பது பொன்னைக் குறிக்கும் பாலிச்சொல்.இச்சொல் பொன்னைக் குறிப்பதை பேராசிரியர்.க.நெடுஞ்செழியன் தன் நூலில் குறிப்பிட்டிருப்பார்.மதுரையில் மக்கள் வழக்கில் இச்சொல் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது. “காஞ்சன் பாண்டியன்” என்னும் பெயர் வைத்திருக்கும் ஒருவர் அதற்கு நேரடி சாட்சியாய் நம்முடன் இருக்கிறார்.
அவர் அச்சொல்லுக்கு பொன் என்றே பொருளும் கூறுவது,மக்கள் வழக்கில் மரபு தொடர்வதின் நீட்சியாய் உள்ளது.இதை உறுதிபடுத்தும் சான்றாய் “பொன் பாண்டி” என்னும் பெயரைக் கொண்டோரையும் கள ஆய்வுகளின் பொழுது காணமுடிகிறது.இது காயபருக்கும் பொன்னுக்கும் உள்ளத்தொடர்பாகவே பார்க்க முடிகிறது,அதைத் தொடர்ந்தே அவர் மனைவியின் சிலைக்கும் பொற்கலை என்னும் பெயர் வைத்திருக்க வேண்டும்.
பொதுவாக ஜெயினர்கள் தங்களின் பெயர்களுடன் பெரும்பாலும் தங்களைச் சார்ந்த கணங்களின் பெயர்களை இணைத்துக்கொள்வது மரபு.ஒப்பீடாக வஜ்ர நந்தி,அச்சுனந்தி,திருத்தக்கத் தேவர் என்ற பெயர்களில் நந்தி,தேவ கணங்களின் (குழு) பெயர்களை இணைத்துச் சொல்வதைப் பார்க்கலாம்.ஆனால் வண்ணக்கோட்பாட்டை வைத்துப் பெயரைக் குறிப்பிடுவது ஆசீவகர்களுக்கு மட்டுமே உள்ள மரபு. அதற்கான சான்றுகளாக வெண்,செம் போன்ற முன்னொட்டுகளை தங்கள் பெயருக்கு முன்பாக இணைத்திருப்பதை பல தமிழிக்கல்வெட்டுகளில் காணலாம்.அந்த நிறங்கள் ஆசீவகத்துடன் கொண்ட தொடர்பை ஆய்வாளர் ரா.விஜயலெட்சுமி தன் நூலில் விளக்கியிருப்பார்.எனவே இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் வெண் (பூரண) காயபரே இக்கோவிலில் அமர்ந்திருக்கும் பூரண அய்யனார்.
மேலும் அவருக்கு எதிராக வழக்கத்திற்கு மாறாக மூன்று யானைகள் நிறுத்தப்பட்டிருகிறது.எனில் மூன்று அய்யனார்களுக்கும் அங்கு சிலை இருந்திருக்க வேண்டும்.பூரண காயபருக்கு சிலை இருக்கிறது,பெரும் வெண்குதிரையின் மீது அமர்ந்தவாறு ஒரு படைத்தளபதி உருவம் உள்ளது,அக்குதிரையின் கச்சைப்பட்டியில் வெள்ளிநிறத்தில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
இதைக்கொண்டே அவர் வெஞ்சின இயக்கன் என்னும் எண்ணம் தோன்றுகிறது.மக்களின் மெய்யியல் வழக்காறுகளில் குறியீடுகள் என்றும் மாற்றமடைவது இல்லை.குதிரையின் மீது போர்கோலத்தில் வெஞ்சினம் உரைக்கும் நிலையில் அச்சிலை அமைக்கப்பட்டுள்ளதால், பூதப்பாண்டியனின் புறப்பாடலில் வெஞ்சினனாக குறிக்கப்படும் அவரே இவராக எண்ண முடிகிறது.எனில் பூதபாண்டியனுக்கு அங்கு சிலை இருக்க வேண்டுமல்லவா..?
ஆம்....இருக்கிறது.கருப்பாக வாளுடன் நிற்கும் வகையில் அவருக்கு சிலை வைக்கப்பட்டு,மக்கள் அவரை பெரியாண்டிக்கருப்பு என்று வணங்கியும் வருகின்றனர்.கரந்தை மலையடிக்கருப்பு மிகவும் புகழ்பெற்ற கருப்புகளில் ஒன்று.அவரின் பெயரை ஒத்து இப்பெயர் இருப்பதால் இரண்டும் ஒன்றே என எண்ணத் தோன்றுகிறது.
ஆய்வுக்குதவிய நூட்கள்:
1.தமிழகத்தில் ஆசீவகர்கள்- முனைவர்.ரா.விஜய லெட்சுமி.
2.ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் – பேராசிரியர்.க.நெடுஞ்செழியன்
3.சமணமும் தமிழும்-மயிலை சீனி வேங்கட சாமி
4.ஆசீவகமும் அய்யனார் வரலாறும்- பேராசிரியர்.க.நெடுஞ்செழியன்
5.புறநானூறு -71
5.வேர்ச்சொல் அகராதி
உதவியோர்:
திரு.வெங்கடேஷ் (மின்னுட்பம் மற்றும் தகவல் தொடர்பு)
திரு.செந்தில்நாதன்(படங்கள்)