கள ஆய்வுகள்

கள ஆய்வு  - 2

மதுரை திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

18.11.2021

 

தமிழகத்தில் மிகத் தொன்மையான தலங்களில் ஒன்று முருகத்தலமான திருப்பரங்குன்றம் ஆறுபடைவீடுகளில் முதல் வீடாக அமையப் பெற்றது. இத்தலம் பற்றிய பரிபாடல் குறிப்பு

மண்மிசை அவிழ் துழாய் மலர்தரு செல்வத்துப்
புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும் 5

ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக    10

பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்”

-எனக் கூற அதைத் தொடர்ந்து திருமுருகாற்றுப்படையும்

கூடல் குடவயின்

இருஞ்சேற் றகல்வயல்

  விரிந்துவாய் அவிழ்ந்த

முள்தாள் தாமரைத்

  துஞ்சி வைகறைக்

கள்கமழ் நெய்தல்

  ஊதி எல்படக்

கண்போல் மலர்ந்த

  காமர் சுனைமலர்  

அஞ்சிறை வண்டின்

  அரிக்கணம் ஒலிக்கும்

குன் றமர்ந் துறைதலும் உரியன்,

  அதா அன்று”

-    என்று முருகனின் முதல் தலமாக திருப்பரங்குன்றத்தை வலியுறுத்துகிறது.

 

அதற்கு ஏற்றார் போல் எழில் கொஞ்சும் அழகில் தலமும் அமைந்திருப்பது காண்போருக்கு இனிமையான ஒன்றுதான்.கோவிலின் பின்புறம், மலையின்மீது  சில ஜெயினப் படுக்கைகள் இந்தியத் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டு, பாதுகாப்பும் தற்பொழுது வழங்கப்பட்டு வருகிறது.இயற்கையாய் மலையின்மேல் குகைகள் அமைக்கப்பட்டு, மலையில் ஏறுவதற்கு சுலபமாய் படிகள்  வெட்டப்பட்டு அந்த குகைத்தளத்தில் படுக்கைகள் செய்யப்பட்டு உள்ளது.

 

அவை வெகு காலமாய் ஜெயின படுக்கைகள் என்றே குறிப்பிடப்பட்டும் வருகின்றன. பொதுவாய் சமணர் படுக்கைகள் என்று அழைத்தாலும் அது தெளிவாக ஜெயினர்களுக்கானது  அல்ல என்பதை அங்கிருக்கும் பற்பல சான்றுகள் நமக்கு விளக்குகின்றன. குகைத்தளத்தில் தலையணை அமைப்புடன் தொடர்ந்து 6 படுக்கைகளும் அதற்கு மேல் இரண்டு படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இது யாருடையது என்பதற்கான புதிருக்கு விடையாய் அமைவது அதை யார் செய்து கொடுத்தார் என்பதைச் சொல்லும் கல்வெட்டு.

 

 

 தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்டு வடிக்கப்பட்ட கல்வெட்டின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர் ஆனால் நிச்சயம் அந்த இருப்பிடம் ஆனது கிமு 5 முதல் கிமு 4 ஆண்டிற்குரியதாய் இருந்திருக்க வேண்டும். அக்கல்வெட்டு குறிப்பிடும் செய்தியானது பின்வருமாறு

அந்துவன் கொடுபிதவன்-----------------------------------------------------à1

எருக்காட்டூர் இழகுடும்பிகன் பொலாலையன்
செய்தான் ஆய்சயன் நெடுசாதன்---------------------------------------à2

- எனவே தெளிவாய் இக்கல்வெட்டானது இதைச் செய்து கொடுத்தவன் ஆய்சயன் சாத்தன்,அந்துவன் என்றே விளிக்கிறது. எனில் யார் அந்த அந்துவன்...? எதற்காக அதை அவன் செய்து கொடுத்தான்...? எனும் கேள்விகளுக்கு புறநானூற்றில் பூதப்பாண்டியன் எழுதிய பாடல் ஆனது பெரும் சான்றாக அமைகிறது அப்பாடல் ஆனது

”வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்    10

பொய்யா யாணர் மையல் கோமான்

மாவனும்மன் எயில் ஆந்தையும்உரை சால்

அந்துவஞ் சாத்தனும்ஆதன் அழிசியும்,

வெஞ் சின இயக்கனும்உளப்படப் பிறரும்,

கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த   15

இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ,

மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த

தென் புலம் காவலின் ஒரீஇபிறர்

வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே!

- இப்பாடலில் தன் ஐம்பேராயக் குழுவான மையல் கோமான், மாவன், அந்தை ,அந்துவன் சாத்தன், ஆதன் அழிசி ,இயக்கன் போன்றோரைக் கொண்டு தன் நாட்டைக் காத்து வருவதாக கூறுகிறான். இதில்தான் அந்துவன் பெயர் இடம் பெறுகிறது.அவர் பெயருடன் பின்னொட்டாக இணைந்திருக்கும் சாத்தன் என்ற பெயரே நம் சந்தேகத்திற்கு உரிய காரணமாக அமைந்திருக்கிறது. அதைவிட இப்புதிருக்கு பெரும் விடையாக அமைவது அதே பாடலில் வரும் இயக்கன் என்னும் பெயர். ஐம்பேராயம் எனும் குழுவில் அந்துவன் சாத்தன் என்னும் பெயரும் வெஞ்சின இயக்கன் என்னும் பெயரும் இடம்பெற்றிருப்பது இருவருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வண்ணமாய் உள்ளது .

வெஞ்சினம் கொள்ளும் தன்மையைப் பெரும்பாலும் படைத்தலைவர்கள் கொள்வர். இதில் வரும் இயக்கன் படைத்தலைவர் தான் என்பதற்கான சான்று சேலம் அம்மன் கோவில்பட்டியில் உள்ள ஓமந்தூர் எனும் ஊரில் உள்ளது; அதுவும் தமிழி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு கூறும் செய்தியானது

பரம்பன்  கோகூர் கிழார் மகன் வியக்கன் /  கோபன் கணதேவன் தொட சுனை

 அதாவது கணங்களின் தேவன் என்பது தெளிவாய் படைகளின் தலைவனை குறிக்கும் சொல்லாக பார்க்கப்பட்டால் அதன் விளக்கத்தை தெளிவாய் உணர்ந்து கொள்ளலாம் .எனில் இந்த இயக்க னுக்கும் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் அந்த படுக்கைக்கும் என்னத் தொடர்பு....? துறவு சென்ற சமணர் அல்லவா படுக்கைக்குச் சொந்தக்காரர்கள்...? எனும் கேள்வி எழலாம். சமணர் என்போர் ஜெயினரா...? என்னும் நூலில் தெளிவாய் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் சமணம் என்னும் சொல் பொதுச் சொல்லாலய் எப்படி மாறிப்போனது, ஆசீவகர்களை மட்டுமே அது எப்படிக் குறித்தது என்பதை விளக்கி இருப்பார். மேலும் தமிழகத்தில் இருக்கும் படுக்கைகள் அனைத்தும் ஆசீவர்களுக்கே சொந்தமானது என்றும் அதை கோல் நீக்கி குடிநீக்கி எப்படி பின்னர் வந்த அருகர் மற்றும் சிவனிய சமயங்களுக்குக் கொடுத்தார்கள் என்பதையும் தன்னுடைய குகைப் பள்ளியின் சமயம் நூலில் விளக்கி இருப்பார். சென்ற பதிவில் கூறியது போல பெரியபுராணத்தில் சேக்கிழார் எவ்வளவு நுட்பமாய் அமண் பாழி என்றும் சமண் பள்ளி என்றும் பிரித்து குறிப்பிடுகிறார் என்பதையும் இங்கு உற்று நோக்கல் வேண்டும்.

எனில் இந்த இயக்கன் துறவியானாரா என்ன...?

இந்தக் கேள்விக்கு மிகத் தெளிவாய் விளக்கம் அளிக்கிறது மிகப்பழமையான மீனாட்சிபுரம் கல்வெட்டு அது பின்வருமாறு

கணிய் நந்த அஸிரிய்இ  குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்

- கணி என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முனையும் வேர்ச்சொல் ஆய்வாளர்  மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அச்சொல்லை கணியம் கணிப்பு கணிதம் என்றே பொருட்களை கையாளுவார்.

 எல்லாம் கண்ணி உரைப்பான் கணி”- (புறப்பொருள் வெண்பாமாலை-8,20)

 மேலும் சீவகசிந்தாமணியும்

பெருகுங் கணியிர் கணி” (சீ.சி.-1062)

-என அச்சொல்லைப் பயன்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது இந்தச் சொல்லானது ஆசீவகம் கூறும் அதாவது வானியல் அறிவு பெற்ற கணியர்களின் அறிவை குறித்த சொல். ஆசீவகம் மற்றும் அய்யனார் வரலாறு நூலில் தமிழ் வழக்கிலுள்ள கணிக்கும் வட வழியிலுள்ள வழக்கிற்கும் இருக்கும் வேறுபாடுகளை தெளிவாய் பேராசிரியர் விளக்கி இருப்பார். பாகவதி சூக்த்தம் போன்ற பாலி ஜெயின இலக்கியங்கள் பரம சுக்க என்ற நல்வெள்ளை நிலையில் மூவரைக் குறிக்கிறது. அவர்கள்...

-    மற்கலி கோசாலர்

-    கிசசாம் கிசா

-    நந்தவாச்சா.

இவர்கள் மூவரையும் ஆசீவக நல்வெள்ளையர்கள் என்று  பதியவும் வைக்கிறது. இதை ஆய்வாளர் பரூவாவும் எடுத்துக்காட்டியுள்ளார். இங்கிருந்து இயக்கன் வடக்கில் சென்று செய்த விடயங்களைக் கொண்டு நந்தர்களின் அதாவது வட அரசர்களின் தொடர்பை பெற்றிருக்க வேண்டும் இது ஆய்வுக்குரிய இடமே.ஏனெனில் நந்தர்களைபற்றிய குறிப்பாக அகநானூற்றில் பாடல் இருப்பதையும் சிறிது உற்றுநோக்கவேண்டியதாய் உள்ளது.

புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து,

பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும்

இமயச் செவ் வரை மானும்கொல்லோ?

பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்

சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை    

நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ?    (அகம் -251)         

இந்த நந்தாசிரியனே கணிநந்தாசிரியன் இயக்கனாக மாங்குளம் கல்வெட்டில் சுட்டப்படுகிறார்.

இவர் வடநாடுகளுக்கு  வந்ததை உறுதிப்படுத்தும் விதமாக இதுகாறும் இருந்த இயக்கன் பற்றிய கல்வெட்டு தமிழில் இருந்ததும், மாங்குளம் கல்வெட்டில் மட்டும்  ஸகரம் இணைந்து வடமொழி கலப்பில்  பெயர் குறிப்பிடபட்டிருப்பதையும் காணலாம் .  இக்குறிப்புகளைக்கொண்டு ஆசீவகத்தின் நந்தவாச்சா என்னும் கணிநந்தாசிரியன் இயக்கனுக்கும் தமிழ் மற்றும் தமிழ் மன்னர்களுக்கும் உள்ளத்தொடர்பைக் காணலாம் . எனில் மேற்குறிப்பிட்டப் புறப்பாடலில்  பூதப்பாண்டியனின் நண்பர்களாக / ஐம்பேராயக் குழுவில் இருக்கும் அந்துவஞ்சாத்தனுக்கும், இயக்கனுக்கும் உள்ளத் தொடர்பு நிர்வாகரீதியாகத் தொடங்கி சமயம் சார்ந்து நின்றது என்பதைக் குறிக்கும் விதமாகவே அந்துவஞ்சாத்தன், இயக்கனின் பள்ளிக்கு படுக்கை அமைத்துத் தந்திருக்க வேண்டும் இதை உறுதிப்படுத்தும் விதமாக அப்படுக்கைகளுக்குக் கீழே ஒரு மனைவியுடன் இருக்கும் அய்யனார் கோவில் உள்ளது.

 

விழுப்புரம் பேரங்கியூரில் தன் மனைவி உடனுறை நிலையில் அமர்ந்திருக்கும் சாத்தன் சிலையைப்பற்றி கேட்டபொழுது பேராசிரியர்.க.நெடுஞ்செழியன் அவர்கள் அதை இயக்கன் என்றே சுட்டினார் .அதேபோன்ற அமைப்புடன் சிலையுள்ள அய்யனார் கோவில் கீழே இருப்பது மேலும் அது  இயக்கனின் இடம்தான் என்பதை சுட்டிக்காட்டும் ஆதாரமாய் உள்ளது.

 

இயக்கன் அய்யனாராக அமர்ந்திருக்கும் சிலை பெயர்த்தெடுக்கபட்டு கீழே இடப்பட்டுள்ளது.அதற்குப்பதிலாய் ஐயனார் என்ற பெயரில் லகுலீஸ்வரர் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளதைக் காணும்பொழுது சிவனிய மதத்திற்கும் ஆசீவகத்திற்கும் இடையேயான சமயப்பூசலாகவே காணமுடிகிறது.

 

குஜராத்திலிருந்து பாசுபத சைவத்தை இங்கு கொண்டுவந்தவரே இந்த லகுலீஸ்வரர்.இதை தொ.ப அவர்களும் கஷ்மீரகத்தில் ஸ்ரீ கண்டர் மூலம் கற்றுக்கொண்ட சைவ சித்தாந்தத்தை தமிழகம் கொண்டுவந்தனர்.அதைப்போலே பின்  லகுலீஸ்வரர் பாசுபதம் இங்கு கொண்டுவந்து தமிழ் சைவத்துடன் இணைத்தார்  என்று ஒரு நேர்காணலில்  குறிப்பிட்டிருப்பார்.

இதை உறுதிப்படுத்தும் சான்றாக மதுரை அரிட்டாப்பட்டி குடைவரையில் சிவன் தலம் அமைக்கப்பட்டு அதற்க்கு வெளியில் லகுலீஸ்வரருக்கு சிலை உள்ளதைக் காணலாம்.எனவே  ஆசீவகர்களுடன் உள்ள சமயப்பூசலை விளக்கும் வண்ணமாய் அய்யனார் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு அங்கு லகுலீஸ்வரர் சிலை வைக்கப்பட்டுள்ளது ஆனால் அங்குள்ள ராக்காயி அம்மனும்,கருப்பு வணக்கமுறையும் நீக்கப்படாத காரணத்தால் அது ஆசீவகத்துடன் கொண்ட தொடர்பை மீண்டும் புரிந்துகொள்ள எளிய  வழியாக இருக்கிறது.

 

சிவனிய சமயத்துடன் நடந்த பூசலுக்கான சான்றுகளாக திருப்பரங்குன்றக் கோவிலின் வாயிலில், கோவிலின் உட்புறத்திலிருந்து பெயர்த்தெடுத்து போடப்பட்ட பல யானை சிலைகளும், கோவில் பிரகார நுழைவுவாயிலில் முதலில் கருப்புக்கென்று தனி சன்னதி அமைத்திருப்பதும்,அதற்கு நேர்மேலே விமானத்தில் வெள்ளையானையை உரித்து ஆடும் நடராஜரையும் காணமுடியும்.

 

 

 

 

அது ஆசீவக அழிப்பைத்தான் குறிக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் விதமாய் நுழைவு வாயிலில் தூணில் ஆடும் நடராஜருக்கு பின்னே அய்யனார் சிலை செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

அது அய்யனார் சிலை தான் என்பதை உறுதிசெய்ய அவர் கையில் வைத்திருக்கும் செண்டு உதவுகிறது.

இதைத் திவாகர நிகண்டு சாத்தன் --à செண்டாயுதன்,யானை வாகனன் என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

மேலும் அந்த மத அழிப்பில் சிவனிய மதம் (வாதம் சார்ந்து ) எப்படி இருந்தது என்பதை விளக்கும் சாரமாக தூண்களின் வடிக்கபட்டிருக்கும் சிற்ப வேலைபாடுகள் உள்ளன யானையின் கண்களைப் பற்றிக்கொண்டு மேலேறி அடிக்கும் யாளி அதன் பின் அடிப்பட்ட அந்த யானை அடுத்த தூணில் சிவலிங்கத்திற்கு நீர்சொரிவது போன்றவை சமயப்பூசலை தெள்ளத்தெளிவாய் விளக்குகிறது.இதையும் தாண்டி ஜெயினர்களின் இடமென்று கூறும் சிலரும் உள்ளனர்.

 

 

தென்பரங்குன்றத்தில் பின்புறம் அதாவது திருப்பரங்குன்றத்தின் பின்புறம் சடையவர்ம பாண்டியனால் உருவாக்கப்பட்ட பாண்டியக் குடைவரை கோவில் உள்ளது.

 

 

அதில் மூலவராக நடராஜர் சிற்பமும்,விநாயகர்,முருகன் புடைபுச்சிற்பங்களும் உள்ளன.அக்குடைவரைக்கு வெளியே தீர்தங்கங்கரர்களுக்கு புடைப்புச்சிற்பமும் செதுக்கப்பட்டு ஒரு பள்ளியமைப்பும் உள்ளது . இது பிற்காலத்ததே.சிலைகளின் வடிவமிப்பை வைத்தே அவை கிபி 7 – 9 ஆம் நூற்றாண்டுடையது என்பதைக்  கணிக்கமுடியும்.பிற்கால ஜெயின சிற்பங்கள் உள்ளதைக்கொண்டு அதை ஜெயினர்களின் இடமென்று சொல்ல முடியுமா என்ன...?,நிச்சியம் இல்லை அதற்க்கு விளக்கம் தரும் விடயமாகவே பெயர்ப்பலகை பின்வருமாறு  தெளிவாய் வைக்கப்பட்டுள்ளது.

.

பெரியபுராணக் குறிப்பைக்கொண்டு சமண் பள்ளி என்று குறிக்கப்படும் ஜெயினப்பள்ளி  வேறு ,அமண் பாழி என்று அழைக்கப்படும் ஆசீவகர்களின் பள்ளி வேறு என்பதை சென்ற கள ஆய்வில் தெளிவாய் விளக்கியிருந்தேன்.

 

பாழி என்பது நீர்நிலை உள்ள இடமே என்றும் நீர் சுனை,முனிவர்கள் தங்குமிடம் என்றும் பல்வேறு தமிழ் அகராதிகள் பொருள் கூறுகின்றன.ஜெயினர்கள் அஸ்நானக் கொள்கை உடையவர்கள் ,முக்கியமாகத் திகம்பரர்கள்.

“மாசு மெய்யர் மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்

பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அந்நெறி செல்லன்”

-என்று ஞானசம்பந்தரும்

“பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமண ரோடு நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்”

-என குளிக்காத உடலும் பீளைக் கண்களும்,துலக்காத பற்களும் உடையவர்கள் என்று அப்பரின் தேவாரமும் தெளிவாய் விளக்குகிறது.

       

எனில் உடற்சுத்தத்தை விரும்பாத ஜெயினர்கள் நீர்நிலை அருகில் வசித்தனர் என்பது ஒப்புக்கொள்ள முடியாத செய்தியாகவே உள்ளது.

ஆனால் ஆசீவகத் தலைவர்களாக பார்க்கப்பட்ட மூன்று அய்யனார்களும்நீர்சுனை வெட்டியதாகவும் ,காத்ததாகவும் அமைக்கப்பட்ட கல்வெட்டுகளும் கோவில்களும்  இருப்பதைக் கொண்டே அவை ஆசீவகர்களுக்கான இடம்தான் என்பதை உறுதிப்படுத்தலாம். இதை மேலும் உறுதிப்படுத்தும் சான்றாக சரவணப் பொய்கைக் குளம் மலையின்மீது அமைக்கப்பட்டுள்ளது. இதை ஒப்புநோக்குகையில் சிரமண மரபு கருநாடகத்தில் நுழைந்து தங்கிய இடமான சிரமண பெளகுலா குளம் ( வெள்ளைக் குளம்) நியாபகம் வருகிறது.

எனவே கல்வெட்டில் உள்ள அன்துவனின் பெயர்,அவர் இயக்கனுடன் கொண்டதொடர்பு ,இயக்கன் கணியராக மாறியக் கல்வெட்டு,அவருக்காய் கீழே எழுப்பப்பட்டிருக்கும் அய்யனார் கோவில்,அதில் அவர் சிலை உடைத்து கீழே போடப்பட்டிருக்கும் அவலநிலை,அவ்விடம் பாழி என்று பெயரிடப்பட்டிருப்பது,பாழி எனும் பெயருக்கு ஏற்றதாய்குளம் அமைக்கபட்டிருப்பது,அவர்கள் தங்கி பயிலும் பள்ளிகளுக்காய் படுக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது,கணியம் என்னும் சொல்லுக்கேற்றதாய் அவர் பெயர் கணிநந்தாசிரியன் இயக்கன் எனக் கல்வெட்டில் இருப்பது,அதற்குச் சான்றாய் வானியல் குறிப்புகள் கொண்டதாய் படுக்கைகள் அருகில் வானியல் சார்பாய் குழிகளும்,கீறல்களும் இருப்பது,யானைகள் தாக்கப்பட்டு அவை அடிபணிவது போல சிற்பங்கள் அமைந்திருப்பது அனைத்தும் கொண்டு இது நந்தாசிரியன் இயக்கன்  அதாவது முக்கல் ஆசான் நல்வெள்ளையாரின் இடம்தான் என்று உறுதிப்படக் கூறமுடியும்.      

 

 

ஆய்வுக்கு உதவிய நூட்கள்:

1.       புறநானூறு – பாடல் 71

2.       புறப்பொருள் வெண்பாமாலை – பாடல் 8.20

3.       சீவகசிந்தாமணி - 1062

4.       அகநானூறு – பாடல் 251

5.       திவாகர நிகண்டு

6.       சமணர் என்போர் ஜெயினரா – பேராசிரியர் க.நெடுஞ்செழியன்

7.       இந்திய சமயங்களும் தத்துவமும் அறிமுகம் –சீனி.துரை சாமி

8.       ஆசீவகமும் அய்யனார் வரலாறும் –பேராசிரியர்.க.நெடுஞ்செழியன்

9.       பரிபாடல்

10.   திருமுருகாற்றுப்படை

11.   பாவாணர் வேர்ச்சொல் கட்டுரைகள்(தேவநேயம்)- பக்கம் 154

12.   அப்பர் தேவாரம்

13.   ஞானசம்பந்தர் தேவாரம்

14.   The ajivikas –B.M.barua

15.   தொ.ப.நேர்காணல் - https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-16/19877-2012-05-24-10-53-50

ஆய்வு உதவி :

1.       செந்தில் நாதன்  - படஉதவி

2.       வெங்கடேஷ் – மென்பொருள் சார் உதவி

3.       யாழினியன்- வேர்ச்சொல் உதவி

4.       இசைத்தமிழ்- இலக்கியப்பாடல்கள் சார் ஆய்வுதவி

5.       கார்த்திக் – ஆய்வுதவி