கள ஆய்வுகள்

கள ஆய்வு -  1

மதுரை சமணர் மலை

கீழக்குயில்குடி

21.10.2021

 

 

தொன்று தொட்டு மதுரையின் முக்கியச் சமணத் தலைமையிடமாகக் கருதப்பட்டு வருவது மதுரை சமணர் மலை. கீழக்குயில் குடியில் சமணத் தீர்த்தங்கரர்கள் என அழைக்கப்படும் 24வரில் பார்சுவநாதர், மகாவீரர், பாகுபலிக்கு புடைப்புச் சிற்பங்கள் மலை மீது அமைக்கப்பட்டுள்ளது. இவ்விடம் பேசிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.அவை புடைப்புச் சிற்பமாய் இருப்பதைக் கொண்டே கி.பி.8-10 நூற்றாண்டின் காலத்தது என்ற முடிவுக்கு வரலாம். அது அச்சுநந்தி எனும் சேவகனின் தாயார் குணவதி, திருக்குறண்டி பாத மூலத்தன், அரிஷ்ட நேமி அடிகள் ,மேலும் அப்பள்ளி மாணவர்கள் ஆகியோரால் செய்தளிக்கப்பட்டது என்று புடைப்புச் சிற்பங்களின் கீழுள்ள வட்டெழுத்துக் கல்வெட்டு விளக்கும். அக்கல்வெட்டு பின்வருமாறு....

 

 

1) ஸ்ரீ அச்சணந்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி ஸ்ரீ

2) ஸவஸ்திஸ்ரீ இப்பள்ளி உடையகுணசேன தேவர் சட்டன்  அந்தலையான் மாசேனன் மருமகன் ஆச்சஞ் சிரிபாலனைச் சார்த்தி செவித்த திருமேனி

3) ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேனதேவர் சட்டன் அரையங்காவிதி தங்கணம்பியைச் சார்த்திச் செய்விச்ச திருமேனி

4) ஸ்ரீ வெண்பு நாட்டு திருக்குறண்டி பாதமூலத்தான் அமித்தின் மரைகள் கனகன் தசெவிச்ச திருமேனி

5) ஸ்வஸ்திஸ்ரீ இப்பள்ளி உடைய குண சேனதேவர் சட்டன் சிங்கடைப் புறத்து கண்டன் பொற்பட்டன் செய்வித்த திருமேனி ஸ்ரீ

6) ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரைக்காட்டாம் பள்ளி அரிஷ்டநேமி அடிகள் செய்வித்த திருமேனி

7) ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாரூடையான் வேஸின் சடையனைச் சார்த்தி இவன்  மணவாட்டி வெண்புணாட்டு நால் கூர் சடைய..

8) இப்பள்ளி உடைய குணசேன தேவர் மாணாக்கா.. சர் சந்திரப்பிரப, வித்த

வட்டெழுத்தினால் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டின் எழுத்துருக் கொண்டு பார்க்கையில் அது கி. பி 8-9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. அப்படியானால் அவர்கள் அக்காலத்தில் தான் அங்கு வந்திருக்க வேண்டும். ஆனால் சமணர் மலை என்னுமிடமோ காலத்தால் அதற்கும் முந்தியதே, எனில் அந்த இடம் யாருக்கு சொந்தமானது.. ??.

இதற்கு விடை வேண்டுமெனில் காலத்தால் முந்தியதற்கான சான்று ஏதேனும் அங்கு கிடைத்திடல் வேண்டும். ஆம், சான்று உள்ளது. சிறு படிக்கட்டுகள் வழியே மலையின் மீது ஏறிச் சென்றால் பார்சுவநாதர் , மகாவீரர் மற்றும் பாகுபலியின் சிற்பங்கள் உண்டு. அதை மட்டும் பார்த்து விட்டு கீழிறங்கிவிடின் உங்கள் எண்ணமும் அதை ஜெயின இடமாகவே தோன்ற வைக்கும். அதற்கும் மேல் ஏறிச் சென்றால் ஒரு கல்  தூண்  இருப்பதைக் காணலாம்.

 

 

 

 

 

 

 

 

 

ஆசிவகமும் ஐயனார் வரலாறும் நூலில் பேராசிரியர் .நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் அதை கழுவேற்ற நினைவுத்தூண் என்றே குறிப்பிடுவார். அந்த இடத்தின் வழி கீழிறங்கிச் சென்றால் இயற்கையாய் அமைந்த பாறை முகட்டைக் காணலாம்,

 

 

அதில் தமிழி(தமிழ் பிராமி)க் கல்வெட்டு இருப்பதைக் காணலாம். தமிழிக் கல்வெட்டின் காலம் (கி. மு 6- கி. பி -2) என்ற வரையறைக்குள் வைக்கலாம். இந்தக் கல்வெட்டு திரு.முத்துக்குமார் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) என்ற வரலாற்று மாணவரால் 2012ல் கண்டெடுக்கப்பட்டது, அது பின்வருமாறு

"பெரு தேருர் குழித்தை அய அம்"

 

மேல் குறிப்பிடப்பட்ட கல்வெட்டில் ஜெயினத் துறவிகளின் பெயர்கள் இல்லாததே அது அவர்களுக்கான இடமாய் முன்பு இல்லை என்பதை விளக்கும்.

 

 இந்திய மற்றும் தமிழ் ஆய்வுலகில் சமணர்கள் என்போர் ஜெயினர்களாகப் பார்க்கப்பட்டதனால் வந்த விளைவு இது. இதற்கான விளக்கத்தை திவாகர நிகண்டு மற்றும் பிங்கல நிகண்டு தெளிவாய் அளிக்கும்.

"சமணர் - சாவர்க்கர், ஜெயினர், பௌத்தர், சமணரே;

ஆசீவகரும் அத்தவத்தோர்."

 எனவே சமணர் என்னும் சொல்லும் ஜெயினரைக் குறித்ததன்று. அது ஜெயினர்களுடன் ஏனைய சமண் சமயத்தவர் அனைவரையும்  குறித்தப் பொதுச் சொல். ஆனால் அதன் மூலச் சொல் அமணன். அமணன் என்னும் சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்தது. அதற்கான ஆதாரமாய்

 "பூழியன் மதுரை யுள்ளார் புறத்துளா ரமணர் சேரும்

பாழியு மருகர் மேவும் பள்ளியு மான வெல்லாங்

கீழுறப் பறித்துப் போக்கிக், கிளரொளித் தூய்மை செய்தே

வாழியப் பதிக ளெல்லா மங்கலம் பொலியச் செய்தார்."

 

 என்னும் பெரிய புராணத்தின் அடியைக் காணலாம். அருகர் மேவும் பள்ளி என்று ஜெயினர்களை தனித்தும், அமணர்கள் இருக்குமிடம் பாழி(நீர் சுணை உள்ள இடம்) என்று ஆசீவகர்களை பிரித்துக் காட்டும்.

சமணப்படுக்கை இருக்கும் இடம் அருகில் உங்களால் ஒரு குளத்தைக் காண முடியுமெனில் அது நிச்சயமாக ஆசீவகர்களுக்கு உரிய பாழிகளே..., ஜெயினப்பள்ளிகள் அல்ல.

எனில் சமணர் மலை என்று அழைக்கப்படுவது எது? ஆம் அது ஆசீவகப் பாழியே. அதை மிகத் தெளிவாய் உணர்த்தும் முதற்சான்று கீழிருக்கும் தாமரைக்குளம். ஜெயினர்கள் அஸ்நானர்கள் அவர்கள் குளிப்பது இல்லை. அப்பருடைய தேவாரப் பாடலில் அவர் ஜெயினாய் இருந்த பொழுது குளிக்காது கண்களில் பீளை பிடித்து இருந்ததை விளக்கும்.

"பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு

நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்"

குளிக்காத கொள்கை உடையவர்கள் குளங்களை எப்படி பண்படுத்தி பயன்படுத்தி இருக்க முடியும்? எனில் மீண்டும் நமக்கு வரும் சந்தேகம் அந்த இடம் யாருடையது என்பதே.

அதற்கான விடை கீழிருக்கும் அய்யனார் கோவிலே.

"ஏரிக்கொரு அய்யனார்

ஊருக்கொரு பிடாரி"

 - என்பது பன்னெடுங்காலமாய் உள்ள சொலவடை. அதற்கேற்ப கீழுள்ள அய்யனார் கோவில் எதிரில் தெளிந்த தாமரை மலர் கொஞ்சும் குளத்தைக் காணலாம்.

அதனுடைய எடுத்துக்காட்டாய் மற்றொரு இடம் இதே பெயரில் உள்ளதைக் காணலாம். அது தூத்துக்குடியில் உள்ள தேரிக்காட்டு அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். சுனைகள் ஏரிக் கரைகளில் பொதுவாய் 2ஆம் ஐயனாரான ஆசீவகத்தில் வினை மறுப்புக் கோட்பாட்டை உருவாக்கிய பூரணர் வெண்காயபரைக் காணலாம். அங்குள்ளவை ஜெயினர்களின் இடமென்றால் மலைக்குக் கீழே அவர்களுக்கு எதிராய் நின்ற ஆசீவகச் சின்னத்தை உடைய அய்யனார் கோவில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?. இக்கேள்வியை உற்றுக்கவனித்தால் அது யாருடைய இடம் என்பதில் தெளிவு பிறக்கும்.

மலையின் கீழுள்ள அய்யனார் கோவிலின் முகப்பே இரண்டாம் சான்றாய் விளங்கும். அதாவது இரண்டு வெள்ளை யானைகள் வாழ்த்த இருக்கும் திருநிலை. ஆதிநாதரின் இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் திருவைப் பற்றியும், அதன் ஆசீவகத் தொடர்பைப் பற்றியும் ஆசீவகமும் அய்யனார் வரலாறும் நூலில் பேராசிரியர்.நெடுஞ்செழியன் அய்யா விளக்கியிருப்பார்.

 

உள்ளே நுழைந்தவுடன் மூலவராக இருக்கும் பூரணர் (பூரணம் மற்றும் பொற்கலை உடன் உறை நிலை)க்கு எதிரே கல்தூணின் கீழ் இருக்கும், ஒரே கல்லில் ஆன வெண்யானை ஆசிவகத் துறவிகளுக்கான சின்னமேயொழிய வேறில்லை.

 

 

 பெரிய வெண்மை யானை பூரணருக்குச் சின்னமாக கொடுத்திருப்பதால் ஏனைய மற்கலி, நந்தாசிரியனை விட இவர் மூத்தவர் என்று தெரிவிக்கும் தீர்க்கமான சான்றாக இருக்கும். அந்த பெரிய யானையின் கீழ் சிறியதாக இருக்கும் 3- யானைகள் அதை உணர்த்தும் மிகப் பெரும் சான்று. அதையே ஆசீவகம் என்றும் தமிழர் அணுவியம் நூலிலும் ஆய்வாளர் பெருந்தகை விளக்கியிருப்பார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மற்கலியின் இறுதி நாட்களில் அவர் தன் மாணவியான ஆலகாயா என்னும் குயவப்பெண் வீட்டில் தங்கி இருந்ததாகவும், அங்குதான் தன் 8 மகா நிமித்தங்களை வெளிப்படுத்தியதாகவும் ஜெயின நூல் விளக்கியுள்ளது. அதைக் குறிக்கும் விதமாகவே படைத்தளபதிகள் மரபில் வந்து ஆசீவகத்தை உருவாக்கிய அய்யனார்களுக்கு குதிரை வாகனமாய் வைக்கப்பட்டுள்ளது. அதையும் வெளிச்சமிட்டுக் காட்டும் ஆதாரமாகவே கீழே உள்ள கோவிலைச் சுற்றிப் புரவிகள் ஆசீவகத்தின் பச்சை, பொன், வெள்ளை, செந்நிறங்களில் வைத்திருப்பதைக் காணலாம்.

 

இவ்வளவு ஆசீவகச் சான்றுகளைக் கொண்டிருக்கும் அந்த மலை பிறகு எப்பொழுது ஜெயினர்களின் இடமானது. அது ஆசீவகர்களின் இடமென்றால் பிறகு எப்படி ஜெயினர்கள் அங்கு வந்தனர்? எனும் கேள்விகளுக்கு அந்தக் கோவில் பிரகாரத்தில் மறுசீரமைப்பு செய்து வரையப்பட்டிருக்கும் ஓவியம் விடை தரும்.

தொல்லியல் எச்சங்களில் சிலவற்றை நாம் பொருட்களாக கண்டறியலாம். ஆனால் அதன் பெரும்பான்மை மக்கள் வழக்காற்றில் தான் பொதிந்துக் கிடக்கும். அந்த முறையில் ஆய்வு செய்ததாலே பேராசிரியர். தொ.பரமசிவம் ஐயாவால் பண்பாட்டின் மீட்சியை கொடுக்க முடிந்தது. அவரின் ஆய்வுகள் அனைத்தும் மக்களின் வழக்காறுகள், செவி வழிக்கதைகள், வாழ்வியல் அடிப்படைகள் பொறுத்தே அமையும். பண்பாட்டு அசைவுகள் நூலே அதற்கு மிகப்பெரும் சான்று. அதைப்போல ஓவியங்கள், சிற்பங்கள் சிதிலம் அடைந்தாலும் மக்கள் அதை சீரமைத்து, வழு நீக்கி வைப்பர். அந்த முறையிலே பிரகார மண்டப மேற்கூரையில் வெள்ளை யானையும், வெள்ளைக் காளையும் தன் தலையைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற ஓவியத்தை காணலாம்.

தமிழகத்தில் பரவலாக ஆசீவக எச்சங்கள் கிடைக்கும் கோவில்களில் புடைப்புச் சிற்பமாக இதைக் காணலாம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற இடங்களில் தூண்களில் புடைப்புச் சிற்பமாக இதை வடித்திருப்பர். டாவின்சி கோட்- படத்தில் சின்னங்களை மொழிபெயர்ப்பது போன்ற உணர்வு ஒவ்வொரு முறையும் மேலோங்குகிறது. இச்சின்னமே அது யாருக்கான இடம் என்பதைச் சொல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

காளை - ஆதிநாதரைத் தலைமையாகக் கொண்ட ஜெயினர்களைக் குறிக்கும்

இடபம்- காளை- இடபதேவர்- ரிஷபம்- ரிசபதேவர்.

யானை நாம் நன்கு அறிந்ததே, அதாவது துறவு நிலையில் இருக்கும் ஆசிவகத் துறவிகளைக் குறிக்கும் .இந்த இரு சின்னங்களும் தங்கள் தலைகளைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வே இந்தப் பெரும் புதிருக்கான விடையாக அமைந்துள்ளது.

பிற்கால ஜைனமானது ஆசிவக மரபுடன் சமரசம் செய்து கொண்டச் சின்னம்தான் அது. தமிழ்மொழியை மூலமாகக் கொள்ளாத ஜெயினர்களுக்கு மக்களிடையே சென்று சேர்வதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். மேலும் கி. பி 7ம் நூற்றாண்டளவில் இருந்த சிவனிய மதத்தின் எழுச்சியும் இவர்களுக்குப் பெரும் தடையாக இருந்தது. எனவே (சமண) அதாவது ஜெயினர்கள் வாதில் தோற்றதன் மூலம் கிடைக்கப் பெற்ற தண்டனைகள் இவையெல்லாம் பெரும் அடியாக விழுந்தது. சுயமான இடம் இல்லாத ஜெயினர்களுக்குப் புகலிடம் தேவைப்பட்டது. ஆம், ஆசிவகம் அதற்குப் புகலிடம் அளித்தது.

"காரணம் வேண்டாக் கடவுட் குழாம்"- அல்லவா

ஆசிவக - ஜெயின மதங்களுக்கிடையே ஏற்பட்ட சமரசதிற்கான சின்னமே அது. பெரும்பாலான ஆசீவகப் பாழிகள் பிற்கால ஜெயினப் பள்ளிகளாக உருப் பெற்றன. ஆய்வாளர்களுக்கும் அதை சமணப்படுக்கை மற்றும் சமணப்பள்ளி என்றே அழைத்திடலாயினர்.

 

 

மேலும் அதை உண்மை என்று உறுதிப்பட வைக்கும் சான்று படிக்கட்டுகளின் துவக்கத்தில் இருக்கும் யானை கீறல் பொறிப்பு. தெளிவாய் தங்கள் சமயத்தின் சின்னத்தைப் பொறித்து வைத்துள்ளனர் இதை விட தெளிவாய் அது யாரின் இடம் என்பதை கூற இயலாது.

 

அங்கிருக்கும் மக்களின் கண் வினவும் பொழுது முத்துராமலிங்கனார் காலத்து அய்யனார் கோவில் அது என்றும், அதற்கு முன் விஜய நகர  மன்னர்களால் கட்டப்பட்டது என்றும் கூறுகின்றனர். வைதீகத்தை அடிப்படையாகக் கொண்ட நாயக்கர் மன்னர்கள் நிச்சயம் ஒரு நாட்டார் வழக்கினருக்கு கோவில் கட்டியிருக்க வாய்ப்பில்லை. மேலும் ஆசீவகர்களுக்கு எதிராக யாளிகளை முன்னிறுத்தும் மரபினர் ,நிச்சயம் இதைக் கட்டியிருக்க வாய்ப்பில்லை. மக்களின் தொல் வழக்காற்றில் இருந்த வழிபாட்டு முறை பீடத்திற்கு அதாவது கோவிலுக்கு பிற்கால விஜயநகர மன்னர்கள் மறுசீரமைப்பு செய்திருக்கலாம்.அப்படியே அதை அணுக முடிகிறது.ஏனெனில் அங்கு ஒரு யாளி சிற்பமும் காணப்படவில்லை.கோயில் பிரகாரத்தின் வலப்புறத்தில் இருக்கும் உக்கிரப் பாண்டியனின் சிலை சில கேள்விகளை எழுப்புகிறது.

 

 

 அய்யனார்களுக்கும் - பாண்டியர்களுக்கும் உண்டான நெருங்கியத் தொடர்பை இலக்கியங்களிலும் கள ஆய்வுகளிலும் காண முடிகிறது.

 

"     வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பில்

பொய்யா யாணர் மையற் கோமான்

மாவனும் மனெயில் ஆந்தையும்,உரைசால்

அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்

வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்

கண்போல் நண்பின் கேளிரொடு கலந்த

இன்களி மகிழ்நகை இழுக்கியான் ஒன்றோ ?  "

என்ற புறப்பாடலில் வரும் வெஞ்சின இயக்கன் 3 ஆம் அய்யனாராகிய கணிநந்தாசிரியர் இயக்கனே. இவரைப்பற்றிய விளக்கத்தை பேராசிரியர்..நெடுஞ்செழியன் ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் நூலில் விளக்கியிருப்பார்.

எனவே தொடக்க காலத்தில் இவ்விடம் பாண்டியர்களால் உண்டாக்கப்பட்ட (துறவிகளுக்கான) இடமாக இருந்திருக்க வேண்டும். இதற்கு ஆதாரமாய் "மலையின் மேல் தமிழிக் கல்வெட்டு இருக்கும் இடம் இயற்கை முகடாய் அமைந்துள்ளது". அதன் கீழே சிதிலமடைந்த நிலையில் படுக்கை அமைப்புகள் காணலாம்.

மேலும் திகம்பர  ஜெயின சிற்பங்களுக்கு மேலே இடிந்த நிலையில் உள்ள மண்டபத் தூண்களை காணலாம். பெரும்பாலும் அய்யனார் கோவில்கள் மற்றும் ஆசீவகப் பள்ளிகள் ஜைன கைப்பற்றுதலுக்குப் பிறகு இடிக்கப்படுதலை பல்வேறு கற்படுக்கைகளுக்கு அருகே காணலாம்.

 

அத்தூணில் உள்ள கல்வெட்டு கி.பி 9ஆம் நூற்றாண்டில்  பராந்தக வீரநாராயணன்(கி.பி.860-905) என்னும் பாண்டிய மன்னன் தன் மனைவி வானவன் மாதேவியின் பெயரால் கட்டியுள்ளான். வீரநாராயணன் என்னும் சிற்றரசன் அக்கோவிலுக்கே காணிக்கையாக நிலங்களைக் குறிப்பதைக் காணலாம்.

"ஸ்வஸ்திஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு இருபத்தேழிதனெதிராண்டி னெ திரான் டு மாடக்குளக் கீழ் திருவுருவகத்து மாதேவிப் பெரும்பள்ளிச் சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளிங்குன்றூர் நீர்நில மிருவே லியாலும் கீழ்மாந்தரனமான் வயும் அதன்துடவரும் மேற்றி நில மிரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் (போய்) யின வடகீழ் சிறபால வயக்கலு மிதன் தென்வய"

 

அய்யனார் கோவிலில் இருந்து 30 அடி தூரத்தில் ஜெயினர்களுக்காய் அமைக்கப்பட்ட குடைவரை உள்ளது. முக்குடையுடன் கூடிய மகாவீரர் பெரும் சிலையுடன் வரவேற்கிறது. இதை செட்டிப்புடவு என்று மக்கள் அழைக்கின்றனர். அதன் கீழிருக்கும் கல்வெட்டுகள் "அபினந்தப் படாரர்" எனும் ஆசிரியரின் மாணாக்கர்களால் உருவாக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.

 

 

 

அக்கல்வெட்டு பின்வருமாறு,

 

"வெண்பு நாட்டுக் குறண்டி திருக்காட்டாம்பள்ளி கனக னந்திப்ப டாரர் அபினந்தபடாரர் அவர் மாணாக்கர் அரிமண்டலப் படாரர் அபினந்தனப்படாரர் செய்வித்த திருமேனி"

 

 

எனினும் முக்கியமாய் உற்று நோக்க வேண்டிய ஒருச் சின்னம் சிம்மத்தின் மீது அமர்ந்த கொற்றவை யானை மீது அமர்ந்திருக்கும் சாத்தனை சூலத்தால் குத்துவது போல இருக்கும் புடைப்புச் சிற்பம்.

இது திகம்பர  ஜெயினர்களுக்காய் செய்யப்பட்ட இடமின்றால், கொற்றவைக்கு அங்கென்ன வேலை?

அப்படியானால் ஜெயினம் வைதீகத்தை ஆரம்பத்திலே ஏற்றுக்கொண்டது என்பார்களா?

மகிசாசுரமர்த்தினி ஜெயினக் கடவுளா என்ன?

ஆசீவகர்களை - வைதீகர்கள் தோற்கடிக்கும் காட்சி சிற்பமாக செட்டிப்புடவில் வடித்து வைக்கப்பட்டுள்ள செயல் இங்கு ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

 

 

 

 

ஆசீவக அமணர்களை தோற்கடித்த இடத்தை திகம்பர ஜெயினர்கள் பின்னாளில் எடுத்துக் கொண்டனர் என்பது 2- சிற்பங்களின் (ஆசீவக அழிப்புச் சின்னம், தீர்த்தங்கரர்கள் சிலை )பொலிவை வைத்து அறியலாம்.

 

 

யானையை அடிக்கும் கொற்றவை பழைய சிற்பமாக சிதிலமடைந்தும், மகாவீரரின் சிற்பம் புதியது மங்காது இருப்பதும் அதில் எது பழையது என்பதைத் தெளிவாகக் காட்டும்.

ஆம் அது ஆசீவகப் பாழியே ஜைனப் பள்ளியாக பின்னாளிலே மாற்றம் பெற்றது.

 

-ஹாருன் பாஷா (DCA,DEEE,IA&C,BE,MBA,..)😊

 

ஆய்வுக்கு உதவிய நூட்கள் :

 

திவாகர நிகண்டு

பிங்கல நிகண்டு

பெரிய புராணம் (பாடல் 2769)

புறநானூறு பாடல் 71

தமிழகத்தில் ஆசீவகர்கள் (முனைவர்.ரா.விஜயலெட்சுமி)

ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் (பேராசிரியர்..நெடுஞ்செழியன்)

நீலகேசி (பாடல் 668)

அப்பர் தேவாரம் ( பாடல் 299)

ஆசீவகமும் அய்யனார் வரலாறும் (பேராசிரியர். .நெடுஞ்செழியன்)

அப்பர் தேவாரம் (பாடல் 387)

The Doctrines of the Ajivikas. -. Arthur Llewellyn Basham

 

உதவியோர் :

திரு.இசைத் தமிழ் ( வரலாற்றுத் துறை)

திரு.வெங்கடேஷ் ( மின்னுட்ப மற்றும் இணைய உதவி)

திரு.செந்தில் நாதன் ( பட உதவி)